தூய இதய ஆண்டவர் ஆலயத்தில் நேர்ந்தளிப்பு தின சிறப்பு திருப்பலி
புதுச்சேரி: தூய இதய ஆண்டவர் ஆலயத்தில், பசிலிக்கா நேர்ந்தளிப்பு செய்யப்பட்ட தினத்தையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இதய ஆண்டவர் ஆலயம், கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி போப்பாண்டவரின் இந்திய தூதர் சாலவாத்தோரே பெனாக்கியோ என்பவரால் பசிலிக்காவாக நேர்ந்தளிப்பு செய்யப்பட்டது. இதன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 31ம் தேதி பசிலிக்காவின் அதிபர் மணிய ஜோசப் முன்னிலையில், தமிழக ஆயர் பேரவை சிறப்பு செயலர் ஜோசப்ராஜ் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. பகல் 12:00 மணிக்கு பெவேந்திரம், பால் தெலாமூர் அடிகளாரும், 5:00 மணிக்கு மெல்கி செதேக் அடிகளார் முன்னிலையில் ஆங்கில திருப்பலியும் நடந்தது. 6:00 மணிக்கு புதுச்சேரி கடலூர் மறை மாநில பேராயர் ஆனந்தராயர், சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, பங்கு பிள்ளைகளுக்கு உறுதிபூசுதல் வழங்கினார். இன்று (2ம் தேதி) மாலை புதுச்சேரி மறை மாநில முதன்மை குரு அருளானந்தம் கொடி இறக்கி விழாவை நிறைவு செய்கிறார்.