விடிய விடிய கீதை கேட்டு...!
ஒரு கிராமத்தில் ராமானுஜர் கீதை சொற்பொழிவு நிகழ்த்தினார். கீதையின் 18 அத்தியாயங்களை 18 நாட்களாக விளக்கினார். அதைக் கேட்க தினமும் ஒருவர் வந்தார். ராமானுஜரின் பேச்சில் மயங்கிப் போனார். சொற்பொழிவு முடிந்து, ராமானுஜர் ஊருக்கு கிளம்பிய சமயத்தில் அவரிடம் வந்தார். சுவாமி! உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இனி நான் உங்களுடன் தான் இருப்பேன். உங்களுக்கு சேவை செய்ய உங்களோடு வருகிறேன், என்றார். ராமானுஜர் அவரிடம்,போச்சு! பதினெட்டும் சொல்லி திருந்தலியே! என்றார். வந்தவருக்கு, அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை... விழித்தார். நான் சொல்லியது உமக்கு புரியவில்லையா? 18 நாள் கீதை சொற்பொழிவு நிகழ்த்தினேன். அதில் கர்மயோகம் பற்றி பேசும் போது, என்ன சொன்னேன்! அவரவருக்கு விதிக்கப்பட்ட கர்மாவை (விதிக்கப் பட்ட விதி அல்லது அன்றாட செயல்பாடுகள்) சரி வர நிறைவேற்ற வேண்டும் என்று கண்ணன் சொல்லியிருப்பதாகச் சொன்னேன் அல்லவா! நீர் இல்லறத்தில் இருப்பவர். உம்மை நம்பி, மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைச் சரிவர கவனிப்பது தானே உமது பணியாக இருக்க வேண்டும். அதை விட்டு விலகி வர நினைத்தால், உமக்கு விதிக்கப்பட்ட கர்மத்திலிருந்து விலகுவதாக அல்லவா அர்த்தம்! அப்படியானால், கீதையில் கண்ணன் சொன்னதை நீர் மீறுகிறீர் என்றாகி விடும். இதற்காகவா, இத்தனை நாள் சொற்பொழிவு நிகழ்த்தினேன்! என்றார். கடவுள் நமக்கு விதித்துள்ள கடமைகளை சரிவரச் செய்தாலே, கீதையைக் கடைபிடிப்பதாக அர்த்தமாகி விடும். சரிதானே!