மோகனூர் பெருமாள் கோவிலில் அக்.,20ல் திருமலையில் ஒருநாள்!
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், அக்டோபர், 20ம் தேதி, திருமலையில் ஒரு நாள் வைபவம் கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் காவிரி ஆற்றின் வடகரையில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், காலை விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனைகளும், மாலையில் கருடசேவையும், திருக்கொடி ஏற்றுதலும் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு விசேஷ அபிஷேக ஆராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருமலையில் ஒரு நாள் வைபவம் என்ற சிறப்பு வழிபாடும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைபவம், அக்டோபர், 20ம் தேதி நடக்கிறது. அன்று, திருமலையில் பெருமாளுக்கு அதிகாலை முதல், இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசனங்கள், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாளுக்கு நடத்தப்படும். விழாவை முன்னிட்டு, அன்று, அதிகாலை, 5 மணிக்கு, சுப்ரபாதம், கோதரிசனம் நடக்கிறது. காலை, 6 மணிக்கு நவநீத ஆரத்தி, 7 மணிக்கு, தோமாலை ஸேவை, 8.15 மணிக்கு, அர்ச்சனை ஸேவை, 9 மணிக்கு, முதல் மணி, சமர்ப்பணம் மற்றும் பலி, சாற்று முறை, 9.45 மணிக்கு, வாரி சர்வ தரிசனம், உற்சவர் விசேஷ திருமஞ்சன ஸேவையும் நடக்கிறது. அதை தொடர்ந்து, பகல், 12 மணிக்கு, சல்லிம்பு இரண்டாம் மணி, மதியம், 3 மணிக்கு திருக்கல்யாணம், மாலை, 5 மணிக்கு வாகன சேவை, 6 மணிக்கு ஒய்யாளுசேவை, நித்யோத்வம், இரவு, 9 மணிக்கு ஏகாந்தசேவையும் நடக்கிறது. திருமலையில் ஒரு நாள் உற்சவ தினத்தன்று, திருப்பதி வெங்கடாஜலபதியை, இத்திருக்கோவிலில், பக்தர்கள் தரிசிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் முத்துசாமி, தக்கார் சபர்மதி, நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.