உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தள்ளாட்டத்தில் தவிக்கும் கலைப் பண்பாட்டுச் சின்னமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!

தள்ளாட்டத்தில் தவிக்கும் கலைப் பண்பாட்டுச் சின்னமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்!

தஞ்சை: தலையாட்டிப் பொம்மைகளை தஞ்சையின் கலைப் பண்பாட்டுச் சின்னம் என்கிறார்கள். இந்த பொம்மைகள் செய்வதற்காகவே தஞ்சையில் தலையாட்டி பொம்மை தெரு என்று ஒரு தெருவே இருந்தது. இங்கே செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள், வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்த காலங்கள் போய் இப்போது உள்ளூரிலேயே கேட்பரில்லை. இதனால், இந்தத் தொழிலில் இருந்த பல குடும்பங்கள் மாற்றுத் தொழில்களைத் தேடி இடம் பெயர்ந்துவிட்டன. நான்கைந்து குடும்பங்கள் மட்டுமே இப்போது தலையாட்டிப் பொம்மைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன- அதுவும் கஷ்ட ஜீவனத்தில். ஒரு காலத்துல தஞ்சையில முந்நூறு குடும்பங்கள் இந்தத் தொழில்ல இருந்தாங்க. பொம்மைகளோட அருமை தெரிஞ்சதால் கிராக்கியும் இருந்துச்சு. பொம்மை செய்யுற குடும்பங்களும் நல்லா வாழ்ந்தாங்க. ஆனா, சீன பொம்மைகளின் வரவும், பிளாஸ்டிக் மோகமும் இந்த பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. ஒரு அருமையான கலை, அழிவுப் பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது.

தலையாட்டி பொம்மைகளை செஞ்சுக்கிட்டு இருந்த பலபேர், இப்ப சித்தாள் வேலைக்கும் கொத்தனார் வேலைக்கும் கௌம்பிட்டாங்க. காலையில பத்து மணிக்கு போறாங்க. அஞ்சு மணிக்கு திரும்பிடுறாங்க. ஒரு மணி நேரம் ஓய்வோட 350 ரூபாய் சம்பளம் கிடைக்கிறப்ப பொம்மைத் தொழிலை எதுக்கு பாக்கணும்னு நினைக்கிறாங்க. இந்தப் பொம்மைகளோட அருமை தெரிஞ்சவங்க, செட்டிநாட்டு ஆச்சிமார்கள்தான். தங்கள் வீட்டுத் தவழும் குழந்தைகள் தஞ்சாவூர் பொம்மையை வைச்சு விளையாடணும். அதுககையால அந்த பொம்மைகள் உடைக்கணும்னு ஆச்சிமார்கள் ஒரு ஐதீகம் வைச்சிருக்காங்க. அவங்கதான் தேடித்தேடி வந்து இந்த பொம்மைகளை வாங்கிட்டுப் போறாங்க. இந்த தொழிலுக்கு வங்கியில் கடன் உதவி கேட்டுப் போனால் இதுக்கெல்லாம் கடன் தரமுடியாது என்று சொல்லி கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக துரத்துகிறார்களாம். 1999 லேயே புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் மீது அரசின் கருணைப் பார்வை பட்டால்தான் உண்டு என்கிறார்கள் பொம்மையை நம்பி இருக்கும் மனிதர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !