பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நேற்று தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் திருத்தேர் விழா வெகுவிமர்சையாக நடக்கும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா, அக்டோபர், 6ம் தேதி வரை காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜையும், திருமஞ்சனத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அக்டோபர், 12ம் தேதி வரை, யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. இரவு, 7 மணிக்கு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனம், திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, 7.30 மணிக்கு, ஸ்வாமி திருத்தேர் எழுந்தருளல் நடந்தது. துணை மேயர் பழனிச்சாமி, மண்டல தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, முன்னாள் அறங்காவலர் செந்தாமரை உள்ளிட்ட பலர், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோட்டையில் புறப்பட்ட தேர், மணிக்கூண்டு, பி.எஸ்.,பார்க், மாரியம்மன் கோவில் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலை, 5 மணிக்கு நிலையை அடைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வழிநெடுகிலும் நின்று, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்த கோட்டை பெருமாளை வணங்கி சென்றனர். இன்று காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனமும், இரவு, 7 மணிக்கு பரிவேட்டையும், நாளை இரவு, 7 மணிக்கு சேஷவாகனமும் நடக்கிறது. அக்டோபர், 16ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீரும், மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுதல் நடக்கிறது. உதவி ஆணையர் வில்வமூர்த்தி உத்தரவுப்படி, செயல் அலுவலர் விமலா ஏற்பாடுகளை செய்திருந்தார்.