மூவுலகரசியம்மன் கோவில் ருத்ராட்ச மரத்தில் "தோமுகி காய்கள்
ஊட்டி:ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியில் உள்ள மூவுலகரசியம்மன் கோவிலில் ஸ்தல விருட்சமாக உள்ள சிறிய ருத்ராட்ச மரத்தில் அதிகளவில் "தோமுகி ருத்ராட்ச காய்கள் காய்த்துள்ளது.குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் மிகவும் பழமையான ருத்ராட்ச மரங்கள் உள்ளன. தற்போது, ஊட்டி மேரீஸ் பகுதியில், "முக்கரசி அம்மன் என, அழைக்கப்படும் மூவுலகரசியம்மன் கோவிலில் "தோமுகி என அழைக்கப்படும் ருத்ராட்ச மரம் ஸ்தல விருட்சமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த மரத்தில் ருத்ராட்ச காய்கள் அதிகளவில் காய்த்துள்ளன. 132 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் 6வது தலைமுறையாக நிர்வகித்து வரும் சுகுமாறன் கூறுகையில்,""ஸ்தல விருட்சமாக வைக்கப்பட்ட இந்த மரத்தில் கடந்த முறை 10 முதல் 20 வரை மட்டுமே "தோமுகி ருத்ராட்ச காய்கள் காய்த்தன. இவை தானாக கீழே விழும் போது கிடைக்கும் ருத்ராட்சத்தில் இரண்டு முகம், மூன்று முகம் கொண்டவையாக உள்ளது. தற்போது ருத்ராட்சை கொத்து போன்று நூற்றுக்கணக்கான காய்கள் காய்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன, என்றார். இதுகுறித்து, "நெஸ்ட் அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், ""தோமுகி என அழைக்கப்படும் ருத்ராட்சம் நெல்லிக்காய் அளவு கொண்டதாக உள்ளது. இந்த காயை பதப்படுத்தி, குருமார்களின் கைகளின் கொடுத்து "தீட்சை வாங்கிய பிறகே இவற்றை அணியும் ருத்ராட்சத்திற்கே பலன்கள் அதிகம். கோவிலில் ஸ்தல விருட்மாக உள்ள ருத்ராட்ச மரத்தின் அடியில் தியானம் செய்வதால் வியாதிகள் குணமடையும். நீலகிரி மாவட்டத்தில் இந்த மரங்களை அதிகளவில் யாரும் வைப்பதில்லை. சில இடங்களில் வைக்கப்பட்டும் இந்த மரங்கள் வளரவில்லை. இங்கு சிறிய மரத்திலேயே தற்போது காய்த்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளது. ஊட்டியில் உள்ள மற்ற கோவில்களிலும் இவற்றை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும், என்றார். இங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.