கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும் 18ல் அன்னாபிஷேகம்
ஈரோடு: ஈரோடு கோட்டையில் உள்ள திருத்தொண்டீஸ்வரர் கோவிலில், 18ம் தேதி மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு கோட்டையில் வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரரை திருத்தொண்டீஸ்வரர் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். வழக்கமாக பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற, 16 வகை பொருட்களால் நித்ய அபிஷேகம் நடக்கும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருட்களை கொண்டு சிவனை அபிஷேகம் செய்வது நற்பயனை தரும் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உகந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியில் அஸ்வினி நட்சத்திரத்தில், வரும், 18ம் தேதி மாலை, ஐந்து மணிக்கு திருத்தொண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு, ஏழு மணிக்கு அன்னம்பாலிப்பு (அன்னதானம்) நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் வரும், 18ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.