சென்னிமலை கோவில் செல்லும் சாலை மோசமானதால் பக்தர்கள் சிரமம்
சென்னிமலை: சென்னிமலை, மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, மிக மோசமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். உலக முழுவதும் உள்ள முருக பக்கதர்கள் பரயாணம் செய்யும் "கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருதலம், சென்னிமலை முருகன் கோவிலாகும். இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்றி, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக, செவ்வாய்கிழமை அதிகாலை கோபூஜைக்கும், இரவு வேங்கை மர தேரோட்டத்துக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். பல வரலாற்று சிறப்புகள் கொண்ட சென்னிமலை, மலை கோவிலுக்கு செல்ல, 1,320 படி வழியாகவும், பக்தர்கள் வசதிக்காக போடப்பட்டுள்ள தார் வழியாகவும், மலை கோவிலுக்கு செல்லலாம். தற்போது அதிக அளவில் வெளியூர் பக்தர்கள் வருவதால், அதிக அளவில் தார் சாலை தான் பயன்படுகிறது. மலை மீது செல்லும் தார் சாலை, நான்கு கிலோ மீட்டர் கொண்டதாகும். மொத்தம், ஒன்பது கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட, இந்த தார் சாலை, தற்போது மிகவும் மோசமாக, குண்டும், குழியுமாக, பல இடங்களில் தார்சாலை சுவடு தெரியாத அளவு சேதமாக உள்ளது. இதனால் தார் சாலை வழியாக இருசக்கர, நான்கு சக்கர வானங்களில் செல்லும் பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பக்தர்கள் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. முன்பு இருந்து, அறங்காவலர் குழு தலைவர் யூ.ஆர்.சி., கனகசபாபதி, பல முறை இந்த சாலையை சீர் அமைத்தார். இருந்தும் மழை காலங்களில், மண் அரித்து சென்றது. தற்போது அவரும் பொறுப்பில் இல்லை. இச்சாலையை சீரமைக்க, பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: திருப்பணிகள் நிறைவு பெற்ற பின், தார்சாலை புதிதாக போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதை விரிவுபடுத்தவும், வனத்துறையிடம் பேசி வருகிறோம். விரைவில் நிறைவு பெறும், என்றனர். வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில், ஊரில் இருந்தால், இக்கோவிலுக்கு கட்டாயம் வருகைபுரியும், வருவாய்த்துறை அமைச்சர் தோப்புவெங்கடாசலம் முயன்றால், சில நாட்களில், இங்கு புதிய சாலையை அமைக்க முடியும். ஆனால், அவரும் மனது வைக்கவில்லை, என, பக்தர்கள் வருந்துகின்றனர்.