உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்த மண்டபத்தை ஒரே ஆண்டில் 20 லட்சம் பேர் கண்டு களிப்பு!

விவேகானந்த மண்டபத்தை ஒரே ஆண்டில் 20 லட்சம் பேர் கண்டு களிப்பு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை கடந்த ஆண்டு 20 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின விழாவை ஒட்டி பாரத நாட்டின் இளைய சமுதாயம் தன்னம்பிக்கையும் எழுச்சியும் பெற்று விளங்கும் முகமாக மாணவ சமுதாயத்திடம் உடற் பயிற்சி, மற்றும் சூரிய நமஸ்காரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி கூடங்களில் கூட்டு சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதிலும் உள்ள ஒரு கோடியே 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று பலன் பெற்றனர். நீதி நெறி உயர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியமைக்காக ஆர்.எஸ்.ஜிண்டால் விருது விவேகானந்த கேந்திரத்திற்கு வழங்கப்பட்டது. இவ்விருது தொகையான 50 லட்ச ரூபாயையும் கேடயத்தினையும் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர்ஜியிடம் இருந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் கேந்திர துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் மூலம் 21 ஆயிரத்து 700 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். கண் சிகிச்சை முகாம்கள் மூலம் 6 ஆயிரத்து 779 பேர்கள் பரிசோதிக்கப்பட்டு 1544 பேர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு 20 லட்சத்து 27 ஆயிரத்து 311 பேர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள அலையும் துறவி கண்காட்சியை 22 ஆயிரத்து 454 பேர்களும், எழுமின் விழுமின் கண்காட்சியை 29 ஆயிரத்து 518 பேர்களும் கண்டு களித்தனர். இங்கு நடைபெற்ற பல்வேறு பயிற்சி முகாம்களில் 1819 இளைஞர்கள் பங்கேற்று பலன் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு தமிழக அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஆனந்தன், பச்சைமால், மற்றும் ராணுவ அதிகாரிகள் ஷொஹானி, பன்சல், கோகோய், , சிங், மற்றும் கோவா மாநில அமைச்சர் லெட்சுமிகாந்த் உட்பல பல முக்கிய பிரமுகர்கள் நினைவு மண்டபத்தை தரிசித்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !