பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு தொழுகை: இறைச்சி தானம் செய்த இஸ்லாமியர்!
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு இறைச்சி தானம் செய்தனர். இஸ்லாமியர்களின் தியாக பண்டிகையான பக்ரீத், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இது தவிர, திடல்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், இஸ்லாமியர் ஏராளமானோர் கூடி, தொழுகை நடத்தினர். சென்னை, பிராட்வே, டான்பாஸ்கோ பள்ளியில், த.மு.மு.க., சார்பில் சிறப்புத்தொழுகை நடந்தது. இதில், ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். மூத்த தலைவர் ஜவஹாருல்லா எம்.எல்.ஏ., பேசுகையில், ""மனிதநேயம் தழைத்தோங்கவும், நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் நிம்மதியாக வாழ பிரார்த்தனை செய்வோம். நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் அன்னிய சக்திகளை முறியடிப்போம், என்றார். சென்னை தீவுத்திடலில், தென்னிந்திய இஷா அத் அத்துல் இஸ்லாம் சபை சார்பிலும், ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில், சிறப்புத் தொழுகை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுத்து, ஏழைகளுக்கு இறைச்சி தானம் செய்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு பிரியாணி கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.