திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 8 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப் பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் 8 லட்சம் பேர் பங்கேற்பர். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.தூத்துக்குடி கலெக்டர் அலுவகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது;திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் 3ம் தேதி துவங்கி 9ம் தேதி முடிய நடக்கிறது. இவ் விழாவிற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.பொதுசுகாதாரத்துறை மூலம் விழாக்களின் போது தினசரி சேர்கின்ற குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், கொசு மருந்து தினசரி அடிக்கவும், 24 மணி நேரம் இயங்க கூடிய மருத்துவக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரத்துறை மூலம் கோயில் வளாகம், குரும்பூர்- குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் போன்ற பகுதிகளுக்கு தங்கு தடையின்றி மின் சப்ளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் மூலம் வரும் 8ம் தேதி சூரசம்ஹாரம் அன்று பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் ரயில் வசதியும் செய்யப்பட்டுள்ளது.தீயணைப்புத்துறை மூலம் கடல் பாதுகாப்பு வளையத்துடன் உயிர்மீட்டு படகுகளும், தீயணைப்பு ஊர்திகளும் தயாராக வைப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேர ஆம்புலன்ஸ் வசதி, அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கடல் பாதுகாப்பு பணிகளில் அதிக காவலர்களை பயன்படுத்துவது, போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்துவது, சிறப்பு விருந்தினர்களுக்கு கார் பாஸ் வழங்குவது, சுவாமியை தரிசனம் செய்வதற்கு வரிசையாக நிற்கும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க போலீஸ்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மூலம் கோயில் யாகசாலையின் அருகில் மரக்கேலரி மற்றும் கடற்கரையில் உள்ள மர மேடைகளை ஆய்வு செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை, டவுன் பஞ்., போன்ற துறைகள் மூலம் செப்பனிட உடனடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கோயில்களில் முக்கியமானதாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடக்க அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.