உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவிலில் கொள்ளை போன 150 ஆண்டு சிலை மீட்பு!

செல்லியம்மன் கோவிலில் கொள்ளை போன 150 ஆண்டு சிலை மீட்பு!

சென்னை: விச்சூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து கொள்ளை போன, 150 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மணலி புதுநகரை அடுத்த, விச்சூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐம்பொன்னாலான மூன்று அடி உயரம் கொண்ட உற்சவர் சிலை இருந்தது. கொள்ளை கடந்த, 9ம் தேதி காலை பூஜை செய்ய பூசாரி துரை சென்ற போது, கோவில் கதவு உடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, 17 உருப்படிகள் கொண்ட, 5 சவரன் நகைகள், உண்டியலில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மணலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து, சிலை திருடர்களை தேடி வந்தனர். மாதவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விவரங்களை சேகரித்தனர். சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகளான, புழல், காவாங்கரையை சேர்ந்த ரூபன், 27, அதே பகுதியை சேர்ந்த ராஜா, 31, ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். தங்கச்சிலை இருவரும், விச்சூர் செல்லியம்மன் கோவிலை சில நாட்கள் நோட்டமிட்டு, கோவில் கதவின் பூட்டை கடப்பாரையால் நெம்பி, அம்மன் நகைகளை திருடினர். அப்போது, உற்சவர் சிலை பளபளப்பாக இருந்ததால், தங்கச் சிலை என நினைத்து, அதை கடத்தி, புழல் ஏரியில் புதைத்து வைத்ததை ஒப்புக் கொண்டனர். சிறையில் அடைப்பு அவர்கள் கொடுத்த தகவலின்படி, ஆர்.டி.ஓ., முன்னிலையில், ஏரியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உற்சவர் சிலையை போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். அந்த சிலை, விச்சூர் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என தெரிந்தது. அந்த சிலை, 150 ஆண்டு பழமையானது என்பதை, சிலை தடுப்பு பிரிவு போலீசார் உறுதிப்படுத்தினர். கைதான ரூபன், பெரிய பாளையம், வெங்கல், மாதவரம் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழக்குகளில் சிக்கி சிறை சென்றது தெரிந்தது. ராஜா, கஞ்சா புகைப்பதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான இருவரும், நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !