சிவசைலம் கோயிலில் 30ம்தேதி திருக்கல்யாணம்!
ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 30ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. ஐப்பசி மாதம் சிவன்கோயில்களில் திருக்கல்யாண வைபவம் நடப்பது வழக்கம். சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள மிகவும்பிரசித்திபெற்ற சிவ ஸ்தலமான சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வரும் 30ம்தேதி மாலை 6மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்று செல்ல வேண்டுமென நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
* கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் 31ம்தேதி சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. கடையத்திலிருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 31ம்தேதி காலை சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்கார தீபராதனையும் நடக்கிறது. பின்னர் தபசுக் காட்சிக்காக காலையில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் இருந்து எழுந்தருளி கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். மதியம் 3மணியளவில் இக்கோயிலில் வைத்து சுவாமி, அம்பாள் தபசு கோலத்தில் காட்சியளித்தலும், தொடர்ந்து சிறப்பு பூஜையும், பின்னர் சுவாமி அம்பாள் மேற்கே வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு வைத்து இரவு 8.30 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
* கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் திருக்கல்யாணம் நவ.1ம்தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வரும் நவ.1ம்தேதி நடக்கிறது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடக்கிறது. மாலை பிரதோஷ வழிபாடு முடிந்த பின்னர் சிறப்பு பூஜையும் தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கடையம் வட்டாரத்தில் சிவசைலநாதர் பரமகல்யாணி கோயிலில் அக்.30ம்தேதியும், கடையம் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் அக்.31ம்தேதியும், கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நவ.1ம்தேதியும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.