உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி கோவிலில் பக்தர்களை மோசடி செய்யும் வியாபாரிகள்!

காளஹஸ்தி கோவிலில் பக்தர்களை மோசடி செய்யும் வியாபாரிகள்!

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களை, கோவில் வளாகத்தில் உள்ள வியாபாரிகள் ஏமாற்றுவதாக, கோவில் நிர்வாகத்திடம், பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பரிகார பூஜை: ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி, வாயு தலமாகும். ராகு-கேது பரிகார பூஜைகளுக்கு உகந்த தலமானதால், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். ராகு-கேது பரிகார பூஜைக்காக. 300, 750, 1,500 என்று மூன்று வகை டிக்கெட்டுகள் உள்ளன. அதில், 300 மற்றும் 750 ரூபாய் டிக்கெட் வாங்கும்போது, இரண்டு வித வெள்ளி நாகங்கள், 3 தேங்காய்கள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, கறுப்பு மற்றும் சிவப்புத் துணி, இரண்டு எலுமிச்சைப் பழங்கள் மற்றும் இரண்டு வகை தானியங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கைத் துணி, 2 லட்டு, 2 வடை ஆகியவை, 1,500 ரூபாய் டிக்கெட்டிற்கு வழங்கப்படுகிறது. வில்வ இலை மற்றும் தாமரை மொட்டுகள் மட்டுமே, கோவில் வளாகத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களின் கடைகளில் தனியாக வாங்க வேண்டும். இந்நிலையில், சில கடைக்காரர்கள், இரு நெய் தீபங்களையும், அருகம்புல் மாலையையும் வாங்க வேண்டும், என்று பக்தர்களை வற்புறுத்தி, விற்கின்றனர். 40 ரூபாய்க்கு விற்கவேண்டிய, இரண்டு நெய்தீபங்களை, 300 ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கு விற்க வேண்டிய அருகம்புல் மாலையை, 50 ரூபாய்க்கும் விற்று வருகின்றனர்.

விற்கும் விலைக்கு...: தொலைதூரத்தில் இருந்து, ராகு-கேது பரிகார பூஜைக்கு வரும் பக்தர்களுக்கு, டிக்கெட்டுடன் வழங்கப்படும் பொருட்கள் குறித்து தெரியாததால், கடைக்காரர்கள் கூறும் விலைக்கு, வாங்கிச் செல்கின்றனர். ஆனால், கோவிலுக்குள்ளே, ராகு-கேது பரிகார பூஜைக்குரிய பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், நெய் தீபங்களை ஏற்றக் கூடாது என்றும், அருகம்புல் மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

வீணாகும் பொருட்கள்: இதனால், அதிக விலை கொடுத்து வாங்கி வரும், தீபங்கள் மற்றும் மாலை வீணாகிறது. நேற்று காலை, சாவித்திரியம்மா என்பவர் நெல்லூரில் இருந்து தன் குடும்பத்தினர் எட்டு பேருடன், காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு, ராகு-கேது பரிகார பூஜைக்காக வந்தார். அவர், 1,500 ரூபாய் டிக்கெட் வாங்கியிருந்தார். அதனுடன் பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டன. வில்வ இலை மற்றும் தாமரை மொட்டுக்களை வாங்கி வந்த அவரிடம், நெய் தீபங்கள் மற்றும் அருகம்புல் மாலையை வற்புறுத்தி விற்றுள்ளனர். ஆனால், கோவிலுக்குள் அவற்றை பயன்படுத்த தடை விதித்ததால், வீணானது. கடைக்காரர்களின் நடவடிக்கை குறித்து, பாதிக்கப்பட்ட பக்தரும், அங்கிருந்த அர்ச்சகர்களும், காவலாளியும், கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோது, கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !