வத்திராயிருப்பில் நவ.3ல் கந்த சஷ்டி விழா துவக்கம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பிரபலமாக நடைபெறும் கந்தசஷ்டி விழா, வரும் நவ.,3 ல் துவங்குகிறது. வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் முதன்மையானது கந்தசஷ்டி திருவிழா. இங்குள்ள சுப்பிரமணியசுவாமிக்கு, ஒருவாரம் விமரிசையாக விழா நடைபெறும். ஆறாம் நாளில், சூரசம்ஹாரம், இறுதிநாளில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில், காலையில், சஷ்டிப்பாராயணம் துவங்கி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், பஜனை வழிபாடுகளும், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் என, இரவு வரை கோயில் களைகட்டி காணப்படும். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபடுவர். பிரசித்தி பெற்ற இத்திருவிழா, வரும் நவ., 3 ல் துவங்குகிறது. நிலக்கோட்டை தபோவன குருநாதர் ஞானதேவ பாரதி சுவாமிகள், விழாவை துவக்கி வைத்து, அருளாசிகள் வழங்குகிறார். தொடர்ந்து 5 நாட்கள் கலைவிழா, நவ. 8 ல் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் சூரசம்ஹாரம், நவ.9ல் சஷ்டி மண்டபத்தில் சுவாமி தேவியர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கந்தசஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன், நிர்வாகிகள் செய்துள்ளனர்.