உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி!

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 20ம் தேதி காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவிலும் காந்திமதி அம்பாள் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு, கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக கம்பை நதி காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். ஐப்பசி திருவிழாவில் காட்சி திருநாளான நேற்று அம்மன் சன்னதி வாசலில் பெருமாள், திருஞான சம்பந்தர் கோயில் முன் ஞான சம்பந்தருக்கும், சந்திவிநாயகர் சன்னதி முன் அகஸ்தியருக்கும், கம்பை நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், ஜலமாகவும் நெல்லையப்பர் காட்சி தந்தார். காட்சி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காட்சி வைபவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 4 ரதவீதிகளிலும் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது சுப்பிரமணியன், சரவணன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இன்னிசை நடந்தது. திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 3.45 மணிக்கு 4.30 மணக்குள் திருக்கல்யாண திருவிழா நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் பட்டண பிரவேசம் வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. சுவாமி, அம்மன் ரிஷிப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேசம் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !