மகா பிரத்யங்கிராதேவி கோவிலில் வித்தியாசமான யாகம்!
மயிலாடுதுறை: அய்யாவாடி, மகா பிரத்யங்கிராதேவி கோவிலில், நேற்று தீபாவளியை ஒட்டி சிறப்பு யாகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில், மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இக் கோவிலில், ஒவ்வொரு அமாவாசையன்றும், மிளகாய் வற்றல் மூலம், நிகும்பலா யாகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஐப்பசி மாத அமாவாசை தீபாவளியை ஒட்டி வருவதால், மிளகாய் வற்றலுக்கு பதில், இனிப்புகளைக் கொண்டு யாகம் நடத்தப்படும். அதன்படி, நேற்று கோவில் மண்டபத்தில், மகா பிரத்யங்கிரா தேவியை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடந்து சர்க்கரை பொங்கல், பசும் பாலால் இனிப்புகளைப் போட்டு யாகத் தை நடத்தினர். அம்பாளுக்கு மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.