ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவ விழா துவங்கியது. மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலம். பூதத்தாழ்வார் அவதரித்த சிறப்பும் உண்டு. கோவில் நந்தவன தோட்ட குருக்கத்தி மலரில், கதை தோற்றத்தில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், அவர் அவதரித்தார். ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், அவருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு அவரது அவதார உற்சவ விழா கடந்த, 2ம் தேதி மாலை நடந்தது. ஆழ்வார் சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அன்று மாலை அவர் வீதியுலா சென்றார். அதைத்தொடர்ந்து, நேற்று பெருமாள், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் சிறப்பு அபிஷேகம், சாற்றுமறையுடன் முடிந்து, பெருமாள், பூதத்தாழ்வார் ஆகியோர் வீதியுலா சென்றனர். முக்கிய உற்சவங்களாக, 7ம் தேதி பிற்பகல், 2:30 மணிக்கு பெருமாள், மணவாள மாமுனிவர், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.