முடி காணிக்கை வருவாயை அதிகரிக்க திருமலை தேவஸ்தானம் முயற்சி!
திருப்பதி: திருமலை ஏழுமலையானின், முடிகாணிக்கை வருமானத்தை அதிகரிக்க, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டு உள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தலைமுடியை, தேவஸ்தானம், ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்று வந்தது. இம்முறையில், இடைத்தரகர்களின் தலையீடு இருந்ததால், வருமானம் குறைவாக கிடைத்தது. வருமானத்தை அதிகரிக்கும் ஆலோசனை வழங்க, தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாச ராஜு சிறப்பு குழுவை ஏற்படுத்தினார். குழு முடிவின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையதளம் மூலம், முடி ஏலம் விடப்படுகிறது. இதனால், வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஏழுமலையான் உண்டியல் காணிக்கைக்கு, அடுத்தபடியாக முடிகாணிக்கை வருவாய் உள்ளது. இதை, மேலும் அதிகரிக்க, தேவஸ்தானம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும், உள்ள நாடுகளில் தலைமுடியை பயன்படுத்தி விக் தயாரிப்பில் அதிக தேவை உள்ள நாடுகளைக் கண்டறிந்து, அங்கு விளம்பரப்படுத்த, தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், வியாபார நுணுக்கங்களை, தேஸ்வதானத்திற்கு அறிக்கையாக சமர்பிக்கும். அதன் அடிப்படையில், முடியை விற்பனை செய்வதன் மூலம், வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.