உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் புதுப்பிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை கோவிலில் புதுப்பிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 27 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட, முருகர் பவனி வரும் தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நேற்று, நகர காவல் எல்லை தெய்வமான, துர்க்கையம்மனுக்கு விழா எடுக்கப்பட்டு துவங்கியது. வரும், 8ம் தேதி, கொடியேற்றமும், 14ம் தேதி, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், தனித்தனி தேரில் வீதி உலா வருவர். வரும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2, 668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது, மஹா தீபமும் ஏற்றப்படுகிறது. கடந்த ஆண்டு மஹா தேரோட்டத்தின் போது, வீதி உலா வந்த முருகர் தேர் அடி பாகம் விரிசல் ஏற்பட்டு, மாட வீதியில் நின்றது; தற்காலிக சீரமைப்புக்கு பிறகு, தேரோட்டம் நடந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், 27 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து மாதமாக முருகர் தேர் சீரமைப்பு பணி நடந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு வெள்ளோட்டம் நடந்தது. அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், முருகர் தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் மாட வீதி உலா வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !