கோலோச்சும் முருகர் கோவிலில் நாளை "வேல் வாங்கும் நிகழ்ச்சி!
துறையூர்: கோலோச்சும் முருகர் கோவிலின் நாளை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. துறையூர் கோலோச்சும் முருகர் கோவிலில் கடந்த, மூன்றாம் தேதி கந்தசஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் உள்ள ஜானகிராம் ஸ்வாமிகள் தலைமையில், கந்தசஷ்டி விழா கடந்த, 3ம் தேதி மாலை கணபதி ஹோமம் செய்து கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்றும் காலை, மதியம், இரவு ஆகிய, மூன்று நேரமும் கந்தசஷ்டி பாராயணம், மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளை, இரவு பராசக்தியிடம், முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சக்திவேல் வாங்கும்போது, முருகப்பெருமானுக்கு முகத்தில் முத்துமுத்தாக வியர்வை கொட்டும் அரிய நிகழ்ச்சி நடப்பது, வேறு எங்கும் காணமுடியாத ஒன்றாகும். 8ம் தேதி இரவு சூரபத்மனை முருகபெருமான் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். ஒன்பதாம் தேதி காலை, 10 மணிக்கு வள்ளி, தெய்வானை உடன் முருகபெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் இனிதே நடைபெறும். மதியம் அன்னதானமும், இரவு முருகபெருமான் பள்ளிறைக்கு செல்லும் வைபவம் நடைபெறும். கோலோச்சும் முருகர் கோவிலில் உள்ள கலியுக குபேரகால சுக்ர வைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் மாலை, 5 மணிக்கு அபிஷேக ஆராதனை வெகு விமரிசையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கோவில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.