உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை

அம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அம்மன் கோவில் உண்டியலை உடைத்து, பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம கும்பலை, போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை, வேங்கிக்கால் புதூரில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினம் காலை, மாலை, இரவு, நேரங்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இக்கோயிலிற்கு வேங்கிக்கால் மற்றும் அதனை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து தரிசித்துவிட்டு காணிக்கை செலுத்துவார்கள். வெள்ளி, ஞாயிறு, அமாவாசை மற்றும் ஆடி மாதங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயில் வேலூர் - திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ளதால், ஏராளமான வாகன ஓட்டிகளும், தரிசனம் செய்ய வருவார்கள். நேற்று முன் தினம் இரவு, 9 மணி அளவில் பூஜை முடிந்த பின் கோவிலை பூசாரி பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை, 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலில் உள்ள இரும்பு கேட் பூட்டப்படாமலும், அம்மன் கழுத்தில் நகைகள் காணாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் முன்பகுதியில் உள்ள உண்டியல் மாயமானதையும் பார்த்தனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றாக திரண்டனர். தகவலறிந்த தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் இரவில் கோவிலுக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த, 3.5 பவுன் நகைகளும், உண்டியலையும் திருடி சென்றது தெரிந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் உண்டியலை வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !