உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பருக்கு சித்திரை சதய விழா! தஞ்சை ஆய்வாளர் அதிசய தகவல்!

அப்பருக்கு சித்திரை சதய விழா! தஞ்சை ஆய்வாளர் அதிசய தகவல்!

தஞ்சாவூர்: தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜனுக்கு ஐப்பசி "சதய விழா கொண்டாடுவது போல, இன்றைக்கு 1,300 ஆண்டுக்கு முன் வாழ்ந்த தேவார மூவர்களில் ஒருவரான அப்பர் ஸ்வாமிக்கு சித்திரை சதய விழா, குருபூஜையை தஞ்சை கிராம மக்கள் இன்றும் நடத்துகின்றனர் என்னும் அதிசய தகவலை தஞ்சை ஆய்வாளரும், சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதருமான மணி.மாறன் வெளியிட்டுள்ளார். ஆங்கில தேதியை கணக்கில் கொண்டு பிறந்தநாள் விழாவை தற்போது கொண்டாடுகிறோம். ஆனால், பிறந்த நட்சத்திரம் அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த தேதியில் வருகிறதோ, அன்றைய நாளில் பிறந்தநாள் விழா முன் கொண்டாடும் வழக்கம். இதன்படி, தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் காலத்திலேயே அவர் பிறந்த ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டது. இவ்விழா தஞ்சை பெரியகோவிலில் தொடர்ந்து நடந்து வருகிறது. நடப்பாண்டு விழா நவ.,10, 11ம் தேதிகள், 2 நாட்கள் நடக்கிறது.

இதேபோல, இன்றைக்கு, 1,300 ஆண்டுக்கு முன் கி.பி., ஏழாம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் படைத்தவர் அப்பர் ஸ்வாமிகள். தேவார மூவரில் ஒருவர். அப்பர் பிறந்த சித்திரை மாத சதய நட்சத்திரத்தில், குருபூஜை விழா தமிழகத்தில் சில கிராமங்களில் தற்போதும் கொண்டாடப்படுகிறது. இந்த தகவல் யாருக்கும் தெரியாத புதிய தகவலாகும். "சோழர் கால கல்வெட்டுகளில் அப்பர் பெருமானுக்கு, சித்திரை சதயத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதை சோழ மன்னன் ராஜராஜன் பொறித்த திருப்புகலூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது என்கிறார், தஞ்சை வரலாற்று ஆய்வாளரும், சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதருமான மணி.மாறன். இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: அப்பர் பெருமான் பிறந்த ஊர் பழைய வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூர் கிராமம். பல ஸ்தலங்களுக்கு சென்று பாடல்களை பாடியுள்ளார். அப்பர் பெருமான் பிறந்து, வாழ்ந்து, மறைந்த ஊரும், அவரால் பாடல் பெற்ற தலமும் அல்லாமல், சம்பந்தமில்லாத ஒரு கிராமத்தில் கடந்த, 85 ஆண்டாக, சித்திரை சதய நாளில் அப்பர் ஸ்வாமிக்கு, குருபூஜை விழா நடக்கிறது. தஞ்சையிலிருந்து மேற்கே பூதலூர் செல்லும் ரோட்டில், 5 கி.மீ., தூரத்தில் மேலவெளி பஞ்.,க்கு உள்பட்ட களிமேடு என்னும் கிராமத்தில் விழா இப்போதும் நடக்கிறது. களிமேடு கிராமத்திலுள்ள வடகரையில் அப்பர் மடம் அமைந்துள்ளது. இதை, 90 ஆண்டுக்கு முன், உயிர்கொலை பாவம் என, கருதிய ஊர் பெரியவர்கள் பொன்னுசாமி வங்கார், பூமாலை சோழகர், சுப்பையா ஸ்வாமிகள், கலியபெருமாள் வங்கார், கரந்தை சிவகுருநாதம்பிள்ளை உருவாக்கினர். இம்மடத்தில் தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. இது, 300 ஆண்டுகள் பழமையான ஓவியம். மலர்களை கொண்டு அலங்கரித்து, அப்பர் ஓவியம் தாங்கிய திருத்தேருக்கு ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நடத்தி, வலம் வரும். அப்போது குடும்பம், குடும்பமாக மக்கள் வணங்குகின்றனர்.

இங்கு பெரும்பாலான வீடுகளில், குழந்தைகளுக்கு அப்பர், திருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என, பெயர் சூட்டி மகிழ்கின்றனர். சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் பெயர் கொண்டவரும் உள்ளனர். இக்கிராமத்தில், ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து வீதிகள் வழியாக தேவார பாடல்களை இசைத்தபடி பெரியவர், சிறியவர் கூட்டமாக ஊர்வலம் செல்கின்றனர். இத்தகைய விழா கடந்த 2013 மே 4, 5, 6ம் தேதிகளில், 3 நாட்கள் நடந்தது. தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜனுக்கு, ஐப்பசி சதயத்தில் பிறந்தநாள் விழா எடுப்பது போல, அப்பருக்கு சித்திரை சதயத்தில் குருபூஜை கொண்டாடுவது, வியப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !