உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்!

தேனி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்!

கூடலூர்: தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது. கூடலூர் கூடல் சுந்தரவேலவலர் கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. நேற்று காலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகம் மற்றும் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், நேற்று 6ம் நாள் நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியர், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் "டும் டும் டும் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் கல்யாண விருந்து, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்து வருகின்றனர். பால்குட ஊர்வலம்: கம்பத்தில் கம்பராயப் பெருமாள், கவுமாரியம்மன், ஆதிசக்திவிநாயகர் மற்றும் வேலப்பர் கோயில்களில் கடந்த 3 ந் தேதியில் இருந்து கந்த சஷ்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வேலப்பர் கோயிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹாரத்திற்கு முன்னதாக நேற்று காலையில் பெண்கள் பாலாபிஷேகம் செய்தனர். பாலாபிஷேகத்திற்காக ஆயிரக்கணக்கில் பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்திஜிவீதிகளில் ஊர்வலம் வந்த பெண்கள், கோயிலிற்கு வந்து, தலையில் சுமந்து வந்த பால் குடங்களை, கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் குடங்களில் இருந்த பாலைக் கொண்டு, முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !