சுவாமிமலை கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED :4352 days ago
கும்பகோணம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இக்கோவிலில் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சூரசம்ஹாரம் விழா நடக்கவில்லை. நேற்று கந்த சஷ்டி என்பதால் மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்க சகஸ்ரமாலை, வைரவேல், வைரகிரீடம் அணிவிக்கப்பட்டு ராஜஅலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் காலை முதலே கூட்டம் கூட்டமாக வந்து சுவாமிநாத சுவாமியை வழிபட்டு சென்றனர். வள்ளி, தெய்வானையுடன் கூடிய உற்சவர் சண்முக சுவாமியும் ராஜ அலங்காரத்தில் இருந்தார். சண்முகார்ச்சனை நடந்தது. முன்னதாக சூரசம்ஹார நேரத்தில் நேற்று மாலை கோவிலில் மீனாட்சிஅம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது.