வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நடந்த, கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பில் நடைபெறும் திருவிழாக்களில், கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சுவாமி தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி, அருள்பாலிப்பார். அதன்படி, கடந்த 5 நாட்களாக, காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு ,தினமும் சிறப்பு அபிஷேகம், சஷ்டிப்பாராயணம் நடந்தது. 6 ம்நாளான நேற்று, சூரசம்ஹாரம் நடந்தது. விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், கந்தசஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன் தலைமையில், வெள்ள விநாயகர் கோயிலில் இருந்து காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், ஊர்வலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்தனர். வள்ளி, தெய்வாணைக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் முத்தாலம்மன் திடல் மைதானத்தில், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், முருகப்பெருமான் எழுந்தருளினார் அவரை தொடர்ந்து, சூரபத்மனும் சப்பரத்தில் பின்தொடர்ந்து சென்றார். இறுதியில் சுவாமி சூரபத்மனை அழித்தார். சுவாமி பால் அபிஷேகம் முடித்து, அலங்கார கோலத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். மீண்டும் கோயிலை சென்றடைந்த சுவாமிக்கு, பக்தர்கள் சார்பில் எதிர்சேவை செய்து வரவேற்பளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில், நேற்று மாலை 5.30 மணிக்கு, சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. சக்திவேலுடன் முருகப்பெருமான் காட்சி அளித்தார். வாணவேடிக்கையுடன் கஜமுகாஸ்வரன், சிங்கமுகாஸ்வரன், சூரபத்மன் என, வரிசையாக வதம் நடந்தது. கடைசியில், சித்தி-முக்தி நடந்தது. அரோகரா கோஷத்துடன், முருகப்பெருமானுக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நடந்தது. இங்கு, கந்தசஷ்டி விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. இதையொட்டி, சண்முகர், வள்ளி, தெய்வானை, தண்டாயுபாணி சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 6 மணிக்கு, சுவாமி, ரதவீதியை சுற்றி வர, சூரசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாண வேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அஜித் தலைமையில் ஊழியர்கள் செய்தனர்.