ராமேஸ்வரம் கோயிலில் பூட்டி கிடக்கும் ராமாயண வரலாறு சிற்ப காட்சியகம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சிற்ப காட்சி கூடம், பூட்டி கிடப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமாயண வரலாற்றை அறியும் வகையில் ராமர், சீதை இருவரும் ராமலிங்க(சிவலிங்கம்) பிரதிஷ்டை செய்து, பூஜை செய்வது போலவும், அதனை சுற்றி லெட்சுமணர், அனுமன், நாரதர், வானர சேனைகள் படை சூழ நின்று வணங்குவது போல், தத்ரூபமாக சிற்பங்கள் வடிவமைத்து, பக்தர்கள் காணும் வகையில், மூன்றாம் பிரகாரத்தில் அமைத்தனர். இதற்கு நுழைவு கட்டணமாக பக்தர் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டது. அலங்கார மின் விளக்கு, சிற்ப வரலாறு குறித்து பக்தர் அறிய ஆடியோ வசதி, பராமரிப்பின்றி போனதால் காட்சி கூடம் கலை இழந்தது. இதனால், கடந்த ஒண்றரை ஆண்டுக்கு முன், காட்சி கூடத்தை கோயில் நிர்வாகம் பூட்டியதால், சிற்பங்கள் மீது தூசி படிந்து, பெயின்ட் உரிந்து, வால்(சுவர்) பேப்பர் சேதமடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால், ராமலிங்க பிரதிஷ்டை பூஜை சிற்பத்தை காண முடியாமல், பக்தர்கள் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர்.
காட்சி கூடத்தில் ஒலி, ஒளி: ஆண்டுக்கு பல கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைக்கும் இக்கோயிலில், வரலாற்றை பிரதிபலிக்கும் சிற்ப காட்சி கூடத்தை மராமத்து செய்து, ஒலி, ஒளி வசதியை ஏற்படுத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில், கும்பாபிஷேகம் காண உள்ள கோயிலில், காட்சி கூடத்தை சீரமைத்து பக்தர்கள் கண்டுகளிக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ்: 1.50 லட்ச ரூபாய் செலவில், ராமலிங்க பிரதிஷ்டை சிற்பம் புதுப்பிக்கப்பட்டு, அலங்கார மின் விளக்குகள் பொருத்தி, விரைவில் பக்தர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.