உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகில பாரத துறவியர் பாதயாத்திரை குடந்தையில் சிறப்பான வரவேற்பு

அகில பாரத துறவியர் பாதயாத்திரை குடந்தையில் சிறப்பான வரவேற்பு

கும்பகோணம்: காவிரி நதியை புனிதமாக போற்றி வழிபடவும், காவிரியை மாசுபடுத்தாமல் பாதுகாக்கவும், வற்றாத ஜீவநதியாக காவிரி விளங்கிட வேண்டும் என வேண்டி, அகில பாரத துறவியர் சங்கத்தினர் கடந்த, 3 ஆண்டுகளாக, தலைக்காவிரியிலிருந்து, பூம்புகார் வரை, விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி கடந்த நவ., 20ம் தேதி தலைக்காவிரியில், காவிரி அன்னை சிலையுடன் துவங்கிய யாத்திரை, முக்கிய ஊர்கள் வழியாக, பூம்புகாருக்கு நேற்று சென்றடைந்தது. இந்த யாத்திரை கடந்த, எட்டாம் தேதி கும்பகோணத்துக்கு வந்தடைந்தது. மேலக்காவிரி அன்னை கருணை இல்லத்தில், திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் அம்பலவாணன், கண்ணன், காவிரி மதியழகன், காவிரி பொங்கல்விழா ஒருங்கிணைப்பாளர் சண்முகம், குமரகுரு, சுந்தரேசன், சபாபதி ஆகியோர் வரவேற்றனர்.பின் பாலக்கரை சத்சங்கம் படித்துறையில் காவிரிக்கு ஆரத்தி எடுத்து, பல்வேறு அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து துறவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, காவிரி நதியை வழிபட்டு, தீபங்களை ஏற்றி காவிரியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !