சிறை கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி: பக்தர்களுக்கு விற்பனை!
மூணாறு: கேரளாவில், சிறை கைதிகளை திருத்தி, சமூகத்தில் புதிய மனிதர்களாக உருவாக்கும் முயற்சியாக, அவர்களுக்கு பல தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இம்மாநிலத்தில் உள்ள, எட்டு சிறைகளில், தினமும், 4 லட்சம் சப்பாத்தி, கோழிக்கறி போன்றவை, சிறைக் கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்டு, வௌ?யில் விற்கப்படுகிறது. ஒரு சப்பாத்தி, 2 ரூபாய்க்கும், கோழிக்கறி, 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிறைகளில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, குறைந்த விலையில் கிடைப்பதால், அவை விற்கப்படும் இடங்களில், நம்மூர் போல் அடிதடி போடாமல், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சீசனில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு, பத்தணம்திட்டா சிறையில், கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியும்; சைவ குறுமாவும், விய்யூர் மத்திய சிறையில், மருத்துவ குணத்துடன் தயாரிக்கப்பட உள்ள, மெடிக்கேட் என்ற குடி தண்ணீர் பாட்டில்களையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.