உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருவுடையாருக்கு பேரபிஷேக வழிபாடு: தஞ்சை பெரியகோவில் பக்தர்கள் பரவசம்!

பெருவுடையாருக்கு பேரபிஷேக வழிபாடு: தஞ்சை பெரியகோவில் பக்தர்கள் பரவசம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் சதய விழா, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருமுறை திருவீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு 36ம் ஆண்டாக பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. இதில், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவிலை கட்டிய சோழமன்னன் ராஜராஜன் சதய விழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு சதய விழாவில், கோவில் யானை, 63 வயது வெள்ளையம்மாள், கம்பீரமாக பங்கேற்றது. சமீபத்தில் வெள்ளையம்மாள், "மறைவை தொடர்ந்து, அந்த இடத்தை திருவையாறு கோவில் மடத்து பெண் யானை தர்மாம்பாள், 40, பிடித்துக்கொண்டது. சதயவிழாவுக்காக தற்காலிகமாக பெரியகோவிலுக்கு வரவழைக்கப்பட்ட பெண் யானை முன்னே செல்ல, ஊர்வலம் ராஜராஜன் பூங்காவை அடைந்தது. அங்கு, ராஜராஜன் சிலைக்கு கலெக்டர் சுப்பையன் மாலை அணிவித்தார். தொடர்ந்து, ஊர்வலம் கொடிமரத்து மூலை, அரண்மனை, கீழவீதி, மேலவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. பின்னர், 9.45 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு, 36ம் ஆண்டாக பேரபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதை, அய்யப்ப ஸ்வாமிகள் நடத்தி வைத்தார். பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சதயவிழாவையொட்டி அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் லயநாத சங்கமம், மோகினி ஆட்டம், பட்டிமன்றம் உள்பட கலைநிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடந்தன. சதயவிழாவையொட்டி, பெரியகோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ராஜராஜன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலையணிவித்தனர். இதையொட்டி வழக்கமாக சிலை மீட்பு குழுவினர் திடீர் போராட்டம் நடத்தலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக தஞ்சை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலை முதல், சோழன் பூங்கா வரை, வழிநெடுக, 100க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப்பட்டனர். தஞ்சை டவுன் டி.எஸ்.பி., அர்ஜூனன், பாபநாசம் டி.எஸ்.பி., சிவாஜி அருள்செல்வன் ஆகியோர் தலைமையில் குவிந்த போலீஸார், ஊர்வலத்தினரை கண்காணித்து, போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தி, பயணிகள், பக்தர்கள் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !