பொற்பனை முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஸ்ரீபொற்பனை முனீஸ்வரர் கோவிலில் புதிதாக கல் மண்டபம், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அழகிய புராதன கலை வடிவில் அமைக்கப்பட்டு, நேற்று கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் என, மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு, நான்காம் கால பூஜையாக, சிறப்பு அலங்காரத்தில் பொற்பனை முனீஸ்வரருக்கு பாலசுப்பிரமணியம், தெட்சிணாமூர்த்தி குருக்கள் தலைமையில், கும்பத்துக்கு சிவச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி அபிஷேக தீபாராதனை செய்தனர். நெம்மக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேறுவதால், தினமும் பல பக்தர்கள் பொற்பனை முனீஸ்வரரை தரிசம் செய்கின்றனர். விழாவில், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், திருப்பணி குழுவினர் மற்றும் நல் இனிய இயக்கத்தினர் செய்து வந்தனர். விழாவையொட்டி, ஆலங்குடி போலீஸார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.