நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்ரமிப்பு நிலம் மீட்பு
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான 1.29 ஏக்கர் "ஆக்ரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு வேலி அமைத்தனர். நெல்லை அருகே தாழையூத்து தென்கலத்தில் நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 700 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அப்பகுதியில் 1.29 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆக்ரமித்து ரோடு அமைத்தது அறநிலையத்துறை அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் 27ல் நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் சார்பில் தென்கலத்தில் நிலத்தை சர்வே செய்யும் பணி நடந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நிலம் தொடர்பான அனைத்து அரசு ஆவணங்களையும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தனியார் நிறுவனம் ஆக்ரமித்திருந்த 1.29 ஏக்கர் நிலம் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கண்ணதாசன் உத்தரவுப்படி ஆய்வாளர் ஆனந்தன், செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், அலுவலர்கள் மானூர் போலீசாருடன் சென்று 1.29 ஏக்கர் ஆக்ரமிப்பு நிலத்தை நேற்று மீட்டனர். நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது. ஆக்ரமிப்பு நிலம் மீட்கப்பட்டது தொடர்பாக சென்னை அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்பட்டதாக அறநிலையத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.