அஷ்ட நாகேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
க.பரமத்தி: ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி சித்தர் பீட ஆலய மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். க.பரமத்தி சந்தோஷ் நகரில் ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி பீட ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த, 13ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, மண்டல பூஜை, சிறப்பு ஹோமம் மற்றும் மஹா தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை, 3 மணிக்கு கும்பாபிஷேக விழா துவங்கியது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, காலை, 7 மணிக்கு, கரூர் சங்கராமடம் பிரமஸ்ரீ ராகவேந்திரா தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், மாவட்ட பொதுச்செயலாளர் சுருளி ராஜன், ஒன்றிய செயலாளர் அன்பு, நிர்வாகிகள் அண்ணாதுரை, ராஜேந்திரன், அருணா சலம், காமராஜ், குணசேகரன் உள்பட பலர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி யோகேஸ்வரன் உள்பட பலர் செய்திருந்தனர்.