உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா: 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை தீப திருவிழா: 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், 2,668 அடி உயரமுள்ள மலை மீது, நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை, 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில், மகா தீபம் ஏற்றும் பெருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை, 4:00 மணிக்கு, வேத மந்திரங்கள் முழங்க, பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, அண்ணாமலையாருக்கு அரோகரா என, பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் உள்ள, அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன. நேற்று மாலை, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர், தங்கக்கொடி மரத்தின் முன் உள்ள, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சரியாக, 5:59 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர், தங்கக்கொடி மரம் முன், எழுந்தருளி நடனமாடினார். 6:00 மணிக்கு, பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில், தங்கக் கொடி மரத்தின் அருகே, ஐந்து தீ பந்தகள் ஏற்றப்பட்டு, அவை, 2,688 அடி உயரமுள்ள மலை மீது உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பிக்கப்பட்டது. அப்போது, இறைவன் ஒளிவடிவாக நிற்பவன் என்பதை குறிக்கும் வகையில், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபத்தை, 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !