செண்பகவல்லியம்மன் கோயிலில் ரூ.8.77 லட்சம் உண்டியல் காணிக்கை
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் 8.77 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது கடந்த எண்ணிக்கையை காட்டிலும் 5.17 லட்சம் அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். செண்பகவல்லியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயிலில் 16 உண்டியல்கள் உள்ளன. மேலும் செண்பகவல்லிம்மன் கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குள சிவசக்தி விநாயகர் கோயில், மார்க்கெட் முருகன் கோயில் ஆகியவற்றில் தலா ஒன்று என மொத்தம் 19 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த ஜூன். 20ந்தேதிக்கு பின்னர் நேற்று எண்ணும் பணி நடந்தது. இதையொட்டி நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பழனிச்செல்வம், உதவி ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் ரவீந்திரன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் ஆகியோரது முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் எண்ணும் பணி நடந்தது. இதில் கடந்த சுமார் 5 மாதத்தில் 8 லட்சத்து 77 ஆயிரத்து 314 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இத்தொகை கடந்த எண்ணிக்கையை காட்டிலும் 5 லட்சத்து 17 ஆயிரத்து 40 ரூபாய் அதிகமாகும். மேலும் 67 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.