சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை சோமவாரம்
கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை ஸ்ரீநடராஜர் கோயிலில் திரளான பெண் பக்தர்கள் சித்சபையை சுற்றி வலம் வந்து ஸ்ரீநடராஜப்பெருமானை தரிசித்தனர். கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்த்து சித்சபையை 108 முறை வலம் வந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடாரஜமூர்த்தியை தரிசித்தனர். சங்காபிஷேகம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். திருவதிகை: பண்ருட்டியை அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதலாம் சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு சாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 2.30 மணி அளவில் வீரட்டானேஸ்வரருக்கு 108 கலசாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வீரட்டானேஸ்வரர் அண்ணாமலையாராகவும், பெரியநாயகி அம்மன் உண்ணாமுலை அம்மனாகவும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதி திருவுலா மகோற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.