தஞ்சை பெரியகோவிலில் உயர்மட்ட குழுவினர் ஆய்வுப்பணி
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியத்துறை உயர்மட்டக்குழுவினர் இன்று (20ம் தேதி) நேரில் ஆய்வு செய்கின்றனர், என, தஞ்சையில், தொல்லியல்துறை அதிகாரி தெரிவித்தார். தஞ்சையில், பெரியகோவிலில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் உலக பாரம்பரிய வார விழாவையொட்டி ஃபோட்டோ கண்காட்சி, கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்ப்பல்கலை துணைவேந்தர் திருமலை பங்கேற்று பேசியதாவது: நமது நாட்டின் தொன்மையான மரபு சின்னங்களை இளம் தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும். இதில், தங்களது பெயர்களை குறிப்பிட்டு கிறுக்கல்களை செய்வதால், வரலாறு அறியப்படாமல் போய்விடக்கூடும் என்பதை உணர வேண்டும். ஒரு சமூகம் சிறப்பாக இருக்க மரபு சார்ந்த அறிவியலை புரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நவீன அறிவியலையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். இதனை புறக்கணித்தால், குறிப்பிட்ட சமூகமே அடிமையாக ஆக நேரிடும். இத்தகைய வரலாற்று தகவலும், கடந்த கால வரலாற்றில் தான் புதைந்து கிடக்கிறது. இதனை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து, பாரம்பரிய சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் தொல்லியல்துறை சென்னை வட்ட உதவி கண்காணிப்பாளர் மோகன்தாஸ் கூறுகையில், ""சென்னை வட்ட தொல்லியல்துறை பிரிவின் கீழ் கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி தவிர்த்து மற்ற பகுதிகளில் 411 தொல்லியல் நினைவு சின்னங்கள் உள்ளன. சென்னை பழவேற்காட்டில் புலிக்கட் என்னும் இடத்தில் டச்சுக்கோட்டை அமைந்துள்ள இடம் அகழ்வாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவிலில் தொல்லியல்துறை உயர்மட்டக்குழுவினர் நாளை (இன்று) நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இதில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்படும், என்றார். இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் தொல்லியல்துறை தஞ்சை உப வட்ட உதவி பராமரிப்பாளர் வாசுதேவன் மற்றும் இண்டாக் அமைப்பு முத்துக்குமார், தஞ்சை தமிழ்ப்பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் செல்வக்குமார் மற்றும் பேராசிரியர் அதியமான் உள்பட பலர் பங்கேற்றனர்.