அழகாக தயாராகிறது மதுரை அழகர்கோவில் தேர்!
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தேரோட்டத்திற்காக புதிதாக தேர் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இக்கோயிலின் பழமையான தேரை மாற்றி, புதிய தேர் செய்யும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. பழைய தேர் மாதிரியே புது தேரும் தயாராகி வருகிறது. தேர், வாகை மரத்திலும், சிற்பங்கள் தேக்கு மரத்திலும் செய்யப்படுகிறது. 22 அடி உயரமுள்ள இந்த தேரை பொன்னமராவதி சிற்பிகள் செல்வன், சேதுராமன் தலைமையில் செய்கின்றனர். அச்சு, சக்கரம், பூதப்பார், விஸ்தாரபார், நாடகாசனம், பத்மாசனம் என பல நிலைகளில் இந்த தேர் வடிவமைக்கும் பணிகள் நடக்கிறது. இதில் நாடகாசனம், பத்மாசனம் நிலைகளுக்கான பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. தற்போது பழைய தேர் நிறுத்தப்பட்ட இடத்தில் வைத்து, அடுத்த கட்ட பணிகளை செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் ஒவ்வொரு நிலையிலும் இங்கு தயார் செய்யப்பட்டு உள்ள மரங்களை, அந்த பகுதியில் கொண்டு சென்று, தேர் நிலைநிறுத்தப்படும். பணிகளை முழுவேகத்தில் நடத்தி, ஆடிமாத தேரோட்டத்தில் புதிய தேர் வலம் வர உள்ளது. புதிய தேரில், பழைய தேரின் சக்கரங்கள் பயன்படுத்தப்படும். பழைய தேர் காட்சிக்கு வைக்கப்
படும்.
சிற்பி சேதுராமன் கூறுகையில்: தேர் பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டது. சிற்பவேலைகளில் தற்போது கவனம் செலுத்துகிறோம். புளியங்குடி, வாசுதேவநல்லூர், பொன்னமராவதி, வாழவஞ்சி தேர்களை எங்கள் குழுதான் செய்தது. அந்த தேர்களுடன் ஒப்பிடுகையில், இந்த தேர் பெரியது. அதனால் ஒவ்வொரு நிலையிலும் அதிக கவனத்துடனும், அக்கறையுடனும் பணி செய்து வருகிறோம், என்றார்.