பக்தி கண்ணில் காணக்கூடியது அல்ல
சிவகாசி: பக்தி கண்ணில் காணகூடியது அல்ல,என,சேங்காலிபுரம் சோமயாஜி ப்ரம்ஹஸ்ரீ தாமோதர தீட்சிதர் கூறினார். சிவகாசி விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் கோயிலில், சிவலீலா உபன்யாசம் பத்து நாட்கள் நடக்கிறது. இதில் பெரிய புராணம் என்ற தலைப்பில், அவர் பேசியதாவது: சிவ பெருமான் வழிபாடு, தொன்று தொட்டு உலகம் முழுவதும் உள்ளது. சிவவழிபாட்டு முறை, எல்லா வழிபாடுகளும் அடக்கம் என, சாஸ்திரம் சொல்கிறது.சிவ பெருமானை வழிபட்டால், எல்லா தெய்வங்களையும் வழிபட்டதற்கு சமம். சிவனை வழிபடுபவர்களுக்கு, எட்டு விதமான செல்வங்களும் கிடைக்கும். நம்மில் பலர் ,எப்போது வேலை இல்லையோ, அப்போதுதான் கோயிலுக்கு செல்கின்றனர். பிரச்னை இருந்தால், கோயிலுக்கு செல்கிறார்கள். தினமும் கோயிலுக்கு செல்லும் பழக்கம் வரவேண்டும். தற்போது வீடுகளில் பூஜை நடக்க வில்லை. என்ன கிடைக்கிறதோ, அதை வைத்து வீடுகளில் பூஜை நடத்த வேண்டும். ராவணன் நல்ல பொருளை பார்த்தால், தனது கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் லிங்கத்தை எடுத்து, பூஜை செய்து அர்ப்பணம் செய்வது வழக்கம். அவரின் பக்தியின் அபரீதத்தால் ,இலங்கைக்கு "ஸ்ரீலங்கா என்ற பெயர் வந்தது. கர்நாடாகவில் லிங்காயத் என்ற சமூகம் இன்றும் லிங்கத்தை எடுத்து வைத்து, தினமும் பூஜை செய்யும் பழக்கம் உள்ளது. பக்தி என்பது வளரக்கூடியது. பக்தி கண்ணில் காணும் விசயம் இல்லை, அனுபவத்தில் உணரக்கூடியது. கற்கண்டு என்ற உடன் நாவில் எப்படி எச்சில் ஊறுகிறதோ, அனுபவத்தில் வரக்கூடியது பக்தி. மின்சாரம் எப்படி கண்ணுக்கு தெரியாதோ, அதே போல்தான் பக்தி. மகாபாரத்தில் எத்தனையோ தர்மங்கள் உள்ளன. சிலர் ஐந்து பேருக்கு ,ஒரு மனைவியா என விமர்ச்சிக்கின்றனர். நமது புத்தியில் என்ன இருக்கிறதோ அதுதான், நம் கண்களுக்கு தெரியும். காமம், குரோதம், மாச்சர்யம் என பலவகை உண்டு. உண்மைகளை ஞான கண் கொண்டு பார்க்க வேண்டும், என்றார்.