தேர் செய்யும் பணி துவக்கப்படுமா?
ADDED :4342 days ago
கண்டமங்கலம்:கண்டமங்கலம் ஒன்றியம் குமளம் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணியை, விரைவில் துவக்க வேண்டும். கண்டமங்கலம் ஒன்றியம் குமளம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பழமையான தேர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. கிராம மக்கள் பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று அறநிலையத் துறையின் மூலம் புதிய தேர் செய்ய 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தேர் செய்ய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணியை செய்ய டெண்டர் எடுத்திருந்தார். ஆனால் அடிக்கல் நாட்டி ஆறு மாதங்கள் கடந்தும், பணிகள் துவக்கவில்லை. இதற்கான பணிகளை விரைவாக துவக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.