உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழங்கால மண்பாண்டம் அணிகலன்கள் கண்டுபிடிப்பு!

பழங்கால மண்பாண்டம் அணிகலன்கள் கண்டுபிடிப்பு!

உடுமலை: உடுமலை அருகே, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய மேற்பரப்பு ஆய்வில், தமிழ், "பிராமி எழுத்துகளுடன் கூடிய, மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு அணிகலன்கள் கண்டறியப்பட்டன. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம் போன்ற கிராமங்கள், உப்பாறு படுகை நாகரிகத்தை சேர்ந்தவை என, வரலாற்று ஆய்வாளர்களால், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில், தொடர் மேற்பரப்பு ஆய்வு நடக்கிறது. நேற்று முன்தினம், சோமவாரப்பட்டி, அமரபுயங்கீஸ்வரர் கோவில் மற்றும் கண்டியம்மன் கோவிலில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி கல்வெட்டியல் மாணவர்கள், பேராசிரியர் ரவி தலைமையில் ஆய்வு நடத்தினர். பின்,கண்டியம்மன் கோவில் எதிரில், உப்பாறு ஓடையில், நடந்த ஆய்வில், சங்ககாலம் மற்றும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட சில்லு, சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் கல் பொம்மைகள், பச்சைக்கற்களால் ஆன, அணிகலன்கள், துளையிடப்பட்ட மண்பாண்டத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டன.

பேராசிரியர் ரவி கூறியதாவது
: இப்பொருட்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்கள் கல்வியில், சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை நிரூபிக்கிறது. பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அணிகலன்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். கண்டியம்மன் கோவிலில், அப்பகுதி வேளாண் மற்றும் நீர் வளத்தை குறிக்கும் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் கொடுமணல், கொங்கல்நகரம்,சோமவாரப்பட்டி பகுதிகளில், பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்து வருகின்றன. தற்போது கிடைத்துள்ள பொருட்கள், முழுமையாக ஆய்வு செய்யப்படும் போது, அப்பகுதியின் தொன்மை தெரிய வரும். இவ்வாறு, பேராசிரியர் ரவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !