உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 கோவில்களில் அன்னதானத்திற்கு ஏற்பாடு: அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு!

3 கோவில்களில் அன்னதானத்திற்கு ஏற்பாடு: அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில், மேலும், மூன்று கோவில்களில், அன்னதானத் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 38 ஆயிரத்து 529 கோவில்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில், 1,458 கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்காக, தமிழக முதல்வர் ஜெ., உத்தரவின் பேரில், ஏற்கனவே துவங்கப்பட்ட அன்னதானத் திட்டம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. அன்னதானத் திட்டத்திற்காக கோவில் வளாகத்தில், தனியே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மதியம் ஒரு வேளை மட்டுமே பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும். கூடுதல் உண்டியல் வருமானம் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள கோவில்களில் மட்டுமே அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கடலூர் பாடலீஸ்வரர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர், வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், வைத்தியநாத சுவாமி, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி உட்பட 16 கோவில்களில் இந்த திட்டம் உள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்டத்தில் உள்ள, மேலும், சில கோவில்களில் இத்திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் ஏற்கனவே 16 கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. திருவதிகை சரநாராயண பெருமாள், காடாம்புலியூர் அடுத்த கொஞ்சிக்குப்பம் அய்யனார், நெய்வேலி வட்டம், 13ல் உள்ள விஜயகணபதி வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட மூன்று கோவில்களில் இத்திட்டத்தை துவங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இத்திட்டம் விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !