உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு

சேலம் காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு

சேலம்: இரண்டாவது அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது, காசி விஸ்வநாதர் கோவில். இங்குள்ள ருத்ராட்சம் மணிகளால் ஆன தேர், வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது. அனைத்து கோவில்களிலும் தங்கத்தேர், உற்சவ மூர்த்தி தேர் போன்றவை இருப்பதுண்டு. ஆனால், முழுக்க முழுக்க ருத்ராட்சத்தால் அமைந்த தேர் இங்கு மட்டுமே உள்ளது. தேரின் நாற்புறமும், ஐந்து முகங்களால் ஆன, 75,000 ருத்ராட்சம் மாலைகளால் சூழப்பட்டுள்ளது. வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என, பக்தர்கள் விரும்பினால், உரிய தொகையை கட்டி, ருத்ராட்ச தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை வலம் வரலாம். ருத்ராட்ச தேரில் சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சோமாஸ்கந்தராக எழுந்தருளுகிறார். கோவிலில் எங்கு பார்த்தாலும், ருத்ராட்ச மணி மாலைகளை காண முடிகிறது. சிவன் கோவிலில் ருத்ராட்சம் மாலைகள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. திருமணம் நடக்க வேண்டும்; படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்; தொழில் வளர்ச்சி காண வேண்டும்; செல்வம் பெருக வேண்டும்; குழந்தை செல்வம் வேண்டும் என்பன போன்ற வேண்டுதல்களை வைக்கும் பக்தர்கள், அது நிறைவேற்றினால், ருத்ராட்ச தேரை வடம் பிடித்து இழுக்கிறேன், என்று வேண்டிக் கொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேற்றிய பலர், தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். காசி விஸ்வநாதர் பள்ளியறை, ஒன்றரை லட்சம் ருத்ராட்ச மணி மாலைகளால் நிறுவப்பட்டுள்ளது. பள்ளியறையின் கதவுகள் முழுவதும் ருத்ராட்ச மணி மாலைகள், கதவுகளின் இடது மற்றும் வலது புறம், பள்ளியறையின் உள்புறம் என, அனைத்து இடங்களிலும் ருத்ராட்ச மணி மாலைகளை காண முடியும். தினமும் இரவு, 8 மணிக்கு ருத்ராட்ச பள்ளியறை கோவில் நிர்வாகத்தின் மூலம் திறக்கப்படுகிறது. அப்போது, பொன்னூஞ்சல் பாடல் பாடி, குறைகளை பக்தர்கள் தேவியிடம் தெரிவிக்கலாம். அதன் மூலம் காசி விஸ்வநாதரின் அருள், பக்தர்களுக்கு கிடைக்கும். கோவிலில் தினமும் அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பக்தர்களின் குறைகளை நீக்குவதற்கு இந்த கோவில் காசி விஸ்வநாதர் உறுதுணையாக உள்ளார். புதிதாக வாகனங்கள் வாங்குவோரும், தொழில் அபிவிருத்திக்காக வரும் தொழில் முனைவோர்களும் காசி விஸ்வநாதரின் காலடியில், சாவிகளை வைத்து, வணங்கி எடுத்துச் செல்வது தொடர்கிறது. பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம் போன்றவை இந்த கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !