திருவண்ணாமலை தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!
ADDED :4336 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கடந்த, 17ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், ஆறு அடி உயரமுள்ள ராட்சத கொப்பரையில், மஹா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்தது. நேற்று முன்தினம், மலையிலிருந்து கொப்பரை இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ராட்சத கொப்பரை, ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும், மலையையே சிவனாக நினைத்து வழிபடும் மலையில் மஹா தீப தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி நடந்து சென்றதால், பரிகார பூஜை செய்யப்பட்டது.மேலும், இந்த தீப கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதத்தை, ஆருத்ரா தரிசனத்தின் போது, நடராஜருக்கு சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.