உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வசதிகள்: ஐகோர்ட் உத்தரவு!

ராமேஸ்வரம் கோயில் வசதிகள்: ஐகோர்ட் உத்தரவு!

மதுரை: ராமேஸ்வரம் கோயில் மற்றும் அக்னி தீர்த்தத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, வக்கீல் கமிஷனர்களை நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கோவை வக்கீல் வெண்ணிலா தாக்கல் செய்த பொது நல மனு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்தத்தில் கலக்கிறது. 22 இடங்களில் தீர்த்தமாட, புரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தீர்த்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். ஏற்கனவே நீதிபதிகள், "தீர்த்தம் வீணாகாமல், சிக்கனமாக தெளிக்கும் முறைகள் குறித்து மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் அருணாசலம், உதவி பேராசிரியர் சந்திரன் தலைமையில் குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். நீதிபதிகள்: ராமேஸ்வரம் கோயில் விஷயத்தில், அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். திருப்பதி, மதுரை கோயில்களுக்கு இணையாக, வசதிகளை மேம்படுத்த வேண்டும். இது குறித்து அரசுத்தரப்பில், 27 அம்ச திட்டங்கள் பற்றி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர், ""அக்னி தீர்த்தம் அருகே இருந்த கழிப்பறையை அகற்றி விட்டோம். கழிவுநீர் சுத்திரிகரிப்பு நிலையம் அமைத்துள்ளோம். அக்னி தீர்த்தம் அருகே சுத்திகரிக்கப்படும் நீரை, 600 மீ.,அப்பால் கடத்துகிறோம், என பதில் மனு செய்தார். புனித நீரை, தானியங்கி தெளிப்பான் இயந்திரம் மூலம் தெளிக்க, பேராசிரியர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. வக்கீல்கள் கமிஷனர்களாக வக்கீல்கள் சுந்தர், கிருஷ்ணவேணி, சீனிவாச ராகவனை நியமிக்கிறோம். இவர்கள், கோயில், தீர்த்தப் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்; புனித தீர்த்தம் உள்ள பகுதிகளில் நிறைவேற்றப் பட்ட வசதிகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து கோர்ட் உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தெளிப்பான் மூலம் தீர்த்தம் தெளிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ராமநாதபுரம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு, நிபுணர் குழுவை நாடலாம். டிச.,18 க்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !