உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பக்தர்களுக்கு அன்னதானம்: ஜனவரி 11 முதல் வழங்க முடிவு!

திருப்பதி பக்தர்களுக்கு அன்னதானம்: ஜனவரி 11 முதல் வழங்க முடிவு!

திருப்பதி: திருப்பதி வரும் பக்தர்களுக்கு, ஜன., 11 முதல், அன்னதானம் வழங்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, திருப்பதி வரும் பக்தர்களுக்கு, வைகுண்ட ஏகாதசி முதல் (ஜனவரி, 11), அன்னதானம் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் (551 அறைகள், 9 யாத்திரிகர் சதன்), விஷ்ணு நிவாசம் (408 அறைகள், 29 யாத்திகர்கள் சதன்), மாதவம் (163 அறைகள்), ஆகிய தேவஸ்தான விடுதிகளில், அன்னதானம் வழங்கப்படும். மதியம் உணவு, இரவு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்படும். இதன் மூலம், ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெறுவர். ஒருவருக்கு ஒரு வேளை உணவு வழங்க, 15 ரூபாய் செலவாகும் என, தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.

திருச்சானூரில் லட்டு: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், மடப்பள்ளியில் பராமரிப்பு பணி நடைபெற்றதால், கடந்த ஆறு மாதமாக, மடப்பள்ளி மூடப்பட்டது. எனவே, தாயாரின் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்க, தேவஸ்தானம் தினமும் திருமலையிலிருந்து, 10 ஆயிரம் லட்டுகளை வரவழைத்து வழங்கியது. தற்போது, மடப்பள்ளி திறக்கப்பட்டுள்ளதால், தாயாரின் லட்டு பிரசாதத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தீர்ந்தது. எனவே, திருமலை ஏழுமலையானின் லட்டு பிரசாதம் வழங்குவது, நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !