தஞ்சை மாரியம்மன் கோவிலில் இன்று லட்ச திருவிளக்கு பூஜை!
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்ச திருவிளக்கு பூஜை, வழிபாட்டு திருவிழா இன்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. இதில், 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி வழிபடுகின்றனர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் லட்சத்திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். நடப்பாண்டு, ஒன்பதாவது ஆண்டு லட்சத்திருவிளக்கு பூஜை இன்று துவங்குகிறது. துவக்க நிகழ்ச்சியில், முதல் குத்துவிளக்கை ஏற்றி, திருவையாறு ஐயாரப்பர் கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள், வழிபாடு நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்று, 10 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர். இதன்படி, 10 நாட்களில், ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜையும், வழிபாடும் நடக்கிறது. இதையொட்டி தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. முடிவில், 26ம் தேதி காலை, 9 மணிக்கு லட்சுமி ஹோமத்துடன் லட்சத்திருவிளக்கு வழிபாடு நிறைவடைகிறது.