ஒரே நாளில் மார்கழி, பவுர்ணமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம்!
திண்டுக்கல்: மார்கழி பிறப்பு மற்றும் பவுர்ணமி ஒரே நாளில் வருவதால் திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழியை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை 3.30 க்கு நடை திறக்கப்பட்டு 11.30 ல் அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 வரை திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும்அதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். திண்டுக்கல் திருச்சி ரோடு மேம்பாலம் தீப்பாச்சி அம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில், ராம்நகர் சத்யநாராயணா கோயில், என்.எஸ்.நகர் ஹரிஓம் சிவசக்தி விநாயகர் கோயில்களில் திருவிளக்கு பூஜை காலை 5 மணியில் இருந்து 6 மணி வரை நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திண்டுக்கல் செம்மடைபட்டி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சிவனுக்கு செவ்வாய் அன்று மாலை சிறப்பு ஆராதனையும், புதன் காலை ஆருத்ரா பூஜையும் நடைபெற உள்ளது. மார்கழி பிறப்பு, பவுர்ணமி இரண்டும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. எனவே இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.