ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, இன்று கோலாகலத்துடன் துவங்குகிறது. ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், எப்பநாடு, பெப்பேன் மற்றும் சின்னக்குன்னூர் கிராமங்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் "சக்கலாத்தி என்ற பண்டிகை முதல் விரதம் இருக்கும் ஹெத்தையம்மன் பக்தர்கள், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை இரவு கோவிலில் நடக்கும் "கத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியாக நேற்று இரவு நடந்த கத்திகை நிகழ்ச்சியை அடுத்து, பக்தர்கள் இன்று காலை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, கலாசார உடையில் செங்கோலுடன், வண்ணக்குடைகளின் கீழ், அம்மனை சற்று தொலைவில் உள்ள மடிமனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு மடிமனைக்கு செல்லும் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் ஒருவாரம் மடிமனையிலேயே தங்கி விரதம் இருந்து கத்திகை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றனர். ஒரு வாரக் காலத்தில், அம்மனுக்கு தேவையான புதிய உடை, மடிமனையிலேயே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் (மக்க) நெய்யப்படுகிறது. முக்கியத் திருவிழா நாளான, 22ம் தேதி, அம்மனை மடிமனையில் இருந்து, அந்தந்த கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். அங்குள்ள "சுத்தக்கல் வளாகத்தில், காணிக்கை செலுத்துதல், அருள்வாக்கு, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்விழாவின் முதற்கட்டமாக, இன்று, கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில், திருவிழா நடக்கிறது. 18ம் தேதி (புதன்) பேரகணி மடிமனையிலும், 20ம் தேதி காத்துகுளி மடிமனையிலும், 21ம் தேதி, ஒன்னதலை மடிமனையிலும் அன்னதானத்துடன், திருவிழா நடக்கிறது. நேற்று ஊட்டி அருகே பெம்பட்டி கிராம பக்தர்கள், கோத்தகிரி பெத்துவ கிராமத்திலுள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் எருமையை அழைத்து சென்ற நிகழ்ச்சி நடந்தது.