உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தன காப்பு கலைப்பு: பக்தர்கள் குவிந்தனர்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனகாப்பு கலைத்து,அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்தில் ஐந்தரை அடி உயர பச்சை மரகத கல்லினால் ஆன சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி சந்தனக்காப்பு கலையப்படும். அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது. புஷ்பாஞ்சலியோடு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.காலை 10.35 மணிக்கு நடராஜரின் திருமேனி மீது பூசப்பட்டிருந்த சந்தன காப்பு கலையப்பட்டு,நடராஜர் சிலை மீது சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் பூசப்பட்டு 32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த நடராஜரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். 100 ரூபாய், 10 ருபாய்,இலவச தரிசனம் என மூன்று பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 100 ரூபாய் டிக்கட் வாங்கியவர்களுக்கு சந்தன பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. சன்னதி அருகே சென்று தரிசிக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.மூன்று வரிசை பக்தர்களும் ஒரே இடத்தில் வெளியே நின்று தரிசித்தனர்.
*ஆருத்ரா தரிசனம் விழாவில், மரகத நடராஜர் சந்தனம் களைப்பு,அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுப்பது வழக்கம்.கடந்த ஆண்டைப்போல் நேற்றும் நிகழ்ச்சிகளை போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை.